அரசியல்உள்நாடு

பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படும் – அது தொடர்பில் மாற்றுக் கருத்து கிடையாது – அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) பாராளுமன்றில் தெரிவித்தார்.

இன்று (22) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன், வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

குறித்த சட்டத்தை திருத்துவதற்கும் அதில் மாற்றம் செய்வதற்குமான அவசியம் உள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவம், அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் கொள்கை பிரகடனத்தில் கூறியதைப் போன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் ஆட்சியமைத்து குறுகிய காலப்பகுதியில் இது குறித்த ஆராய தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் இங்கு குறிப்பிட்டார்.

குறித்த குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடியதோடு, அதின் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய, திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இம்மாத இறுதிக்குள் அது தொடர்பான பணிகளை நிறைவு செய்து, செப்டம்பர் மாத முற்பகுதியில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் தற்போது அமுலில் உள்ள நிலையிலும் அதன் ஊடாக இனம், மதம் என்ற அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிட்ட அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காகவே அவை தற்போது பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

ஆயினும் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய புதிய சட்டமொன்றை கொண்டு வரவுள்ளதாகவும் அமைச்சர் விஜித ​ஹேரத் இன்றையதினம் (22) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

Related posts

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம்

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானம்