அரசியல்உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் – சஜித் பிரேமதாச

தற்போது, கிட்டத்தட்ட 40,000 பட்டதாரிகள் வேலையில்லாமல் காணப்படுகின்றனர். தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள், கடந்த தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்தனர்.

“வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற கொள்கை அறிக்கையின் 72 ஆவது பக்கத்தில், வேலையில்லாப் பட்டதாரிகளை எவ்வாறு தொழிலுக்கு உள்ளீர்ப்போம் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கும், 3,000 பட்டதாரிகளை STEM துறையிலும் மேலும் 9,000 பேரை STEM அல்லாத துறைகளிலும் உள்ளீர்ப்புச் செய்வோம் கொள்கை அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தாலும், இன்று இந்த பட்டதாரிகள் கைவிடப்பட்டுள்ளனர்.

இவர்களின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் பொய்த்துப்போய்விட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Citizens’ Voice வேலைத்திட்டத்தின் கீழ் வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு சமூகமளித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை முன்வைத்தனர்.

இந்தப் பிரச்சினைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் சமயங்களில் வழங்கிய வாக்குறுதிகளும், ஏமாற்றும் கதைகளும் இன்று சமூக ஊடகங்களில் பரவி காணப்படுகின்றன.

தாம் பதவிகளுக்கு வந்த பிற்பாடு தொழில்களை நிச்சயம் பெற்றுத் தருவோம் என ஆளும் தரப்பு அமைச்சர்கள் தேர்தல் சமயங்களில் வேலையில்லா பட்டதாரிகள் மத்தியில் பல வாக்குறுதிகளை வழங்கினர்.

தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்திலயே தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.

தேர்தல் காலத்தில் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவைப் பெற்றுத் தர வேலையற்ற பட்டதாரிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்த நபருக்கு இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பணிப்பாளர் பதவியைப் பெற்றுக் கொடுத்து விட்டு, ஏனைய பட்டதாரிகளை கைவிட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இலவசக் கல்வியின் மூலம் பட்டம் பெற்ற பிள்ளைகளை பெறுமானம் அற்றவர்களாக கருத வேண்டாம்.

வேலையில்லாப் பட்டதாரிகள் தமது தொழில் உரிமைக்காகப் போராடும்போது, பல்வேறு தரப்பினர் அவர்களைக் கேலி செய்து வருகின்றனர். இவர்களை பெறுமானம் அற்றவர்களாக கருதுகின்றனர்.

இத்தரப்பினர் இலவசக் கல்வி முறையின் மூலம் பட்டம் பெற்றவர்கள். ஆகவே அவர்களை அவ்வாறு கருத வேண்டாம். அவர்களினது தகுதிகளை குறைமதிப்புக்குட்படுத்த வேண்டாம்.

இலவசக் கல்வியின் மூலம் பட்டம் பெற்ற பிள்ளைகளை பெறுமானம் அற்றவர்கள் என்று குறிப்பிடுவது வெட்கக்கேடானதும், அவமரியாதைக்குரிய செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.

இளங்கலைப் பட்டத்தை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட சுமார் 50,000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன என பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சரவைக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

50,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக இருந்தால், இந்த 40,000 பட்டதாரிகளை ஏன் ஆட்சேர்ப்பு செய்யப்படாதிருக்கின்றனர் என்பதில் பிரச்சினை எழுகிறது.

பொறுப்புள்ள முற்போக்கான மக்கள் சார் எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படும் வரை ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

இன்று முதல் மின்வெட்டு

காத்தான்குடி – மறுமலர்ச்சி நகரம் – ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் ஆரம்பித்து வைப்பு!

editor

American Plastics நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது

editor