உள்நாடு

தீர்வு வழங்காவிட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்வோம் – தபால் தொழிற்சங்கங்கள்

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டியேற்படும். அதற்கமைய ஏனைய நிறுவனங்களையும் எமது போராட்டத்தில் இணைத்துக் கொள்வோம்.

இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கும், நஷ்டத்துக்கும் அரசாங்கமும் அதிகாரிகளுமே பொறுப்பு கூற வேண்டும் என ஒன்றிணைந்த தபால் சேவை ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொழும்பிலிருந்து எந்தவொரு மாகாணத்துக்கும், ஏனைய மாகாணங்களிலிருந்து கொழும்பிற்கும் தபால் பரிமாற்றம் இடம்பெறவில்லை.

வேலை நிறுத்ததில் ஈடுபடுவோருக்கு அழுத்தம் பிரயோகிப்பதோ, அச்சுறுத்தல் விடுப்பதோ பொறுத்தமற்றது.

பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கோரியே நாம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.

பேச்சுவார்த்தைகளுக்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதற்கு எமக்கு வாய்ப்பளிக்குமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கின்றோம். 18 000க்கும் மேற்பட்ட தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எமது 19 கோரிக்கைகள் தொடர்பில் 15 நாட்களுக்கு முன்னதாகவே தபால்மா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்தோம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும். கைரேகைப் பதிவு மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே எம்மால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டிருக்கின்றார்.

இது உண்மைக்கு புறம்பான கருத்தாகும். மனித வளம், அடிப்படை வசதிகள், அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையிலேயே நாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.

எனவே எமது போராட்டம் தொடர்பில் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டியேற்படும். அதற்கமைய ஏனைய நிறுவனங்களையும் எமது போராட்டத்தில் இணைத்துக் கொள்வோம்.

எமது போராட்டால் பொது மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருக்கக் கூடும். அதற்கு கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு அரசாங்கமும், தபால்துறை உயர் அதிகாரிகளுமே பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு புதிய கட்டுப்பாடு இல்லை