உள்நாடுவிசேட செய்திகள்

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த நடவடிக்கை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள தேசிய புத்தாக்க முகவராண்மையின் (NIA – National Innovation Agency) வழிகாட்டலின் கீழ், உலகளாவிய புத்தாக்க குறியீட்டுடன் (Global Innovation Index) தொடர்புடைய தரவுத் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (14) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் விஞ்ஞான, தொழில்நுட்பம், கல்வி மற்றும் கைத்தொழில் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

7 முக்கிய கட்டமைப்புகளின் கீழ் 80 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி நாடுகளின் புத்தாக்க செயல்திறனை அளவிடும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய புத்தாக்க குறியீட்டு தரவரிசையில் இலங்கையின் நிலையை உயர்த்த அனைத்து தரப்பினர்களையும் ஈடுபடுத்துவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துதல், முதலீட்டை ஈர்த்தல் மற்றும் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோருக்கான மையமாக மாறுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பது, அரச -தனியார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது மற்றும் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப வலுவான புத்தாக்க சுற்றுச்சூழல் கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் ஆராய்ச்சி, தொழில்நுட்பம், படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவது ஆகியவற்றில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

தேவையான தரவுகளின் முக்கிய பாதுகாவலர்களான முக்கிய அமைச்சுக்கள், தேசிய நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி தனியார் துறை பிரதிநிதிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தரவு இடைவெளிகளை சீர்செய்தல், ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் நாட்டின் புத்தாக்க செயல்திறன் குறிகாட்டியை ஆதரிப்பதற்காக அனைத்து தரப்பினர்களுக்கும் தெளிவான பங்களிப்பை வரையறுத்தல் ஆகியவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்தியுள்ளது.

ஆரம்ப அமர்வைத் தொடர்ந்து, இலங்கையின் புத்தாக்கத் திறன் உலக அரங்கில் துல்லியமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்து தரவு சேகரிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான ஒரு நிலையான தேசிய பொறிமுறையை வரைபடமாக்குவதற்கான ஒரு செயற்பாட்டு அமர்வு நடைபெற்றது.

புத்தாக்கம், கொள்கைரீதியில் முன்னுரிமையானது மட்டுமல்லாமல் தேசிய முன்னேற்றத்தின் நடைமுறை இயக்கியாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.

விஞ்ஞானத் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன, NIA நிர்வாக சபையின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி மற்றும் நாட்டின் பல்வேறு முக்கிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

பயணியுடன் வாக்குவாதம் – காதை கடித்த பஸ் நடத்துனர்

சபாநாயகரை சந்தித்த ஐக்கிய அமெரிக்கத் தூதுவர்

editor

“ கொழும்பு தாமரைக் கோபுர களியாட்ட நிகழ்வில் இளைஞனும், யுவதியும் பலி”