மன்னார் காற்றாலை மின் அபிவிருத்தித் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மின்சார அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிராந்தியத்தில் உள்ள காற்றாலை மின் திட்டம் மற்றும் இல்மனைட் கனிம வளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்டப் பிரதிநிதிகள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்டக் குடிமக்கள் குழுவின் பிரதிநிதிகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
காற்றாலை மின் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பங்கேற்பாளர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.
கலந்துரையாடலின் போது, மன்னார் சிவில் சமூகப் பிரதிநிதிகள் திட்டத்தின் ஆரம்ப கட்டங்களால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சுட்டிக்காட்டினர்.
இதன் விளைவாக, அனைத்து தரப்பினருடனும் மேலதிக ஆலோசனை நடத்தப்படும் வரை திட்டப் பணிகள் இடைநிறுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் இரண்டு வாரங்களுக்குள் ஒரு விசேட கூட்டம் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
காற்றாலை மின் திட்டம் தொடர்பான உபகரணங்களை கொண்டு செல்வதை நிறுத்துமாறும், மேலதிக அறிவித்தல் வரும் வரை அனைத்து இயந்திரங்களையும் பாதுகாப்பாக வேறொரு இடத்தில் சேமித்து வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.