உள்நாடு

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்யும் விவாதம்

பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் பிரகாரம் அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் நாளை 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

நாளை 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. பி.ப 4.00 மணிக்கு இதற்கான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்காக ஆளும் தரப்பினரால் கொண்டு வரப்பட்ட யோசனை கடந்த பெப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த யோசனையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு சபாநாயகர் ஜகத் விக்கரமரத்ன 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் நடவடிக்கை முறைச் சட்டத்தின் பிரகாரம் தற்போதைய பிரதம நீதியரசர் பி.பி சூரசேன தலைமையில் சிறப்பு குழுவொன்றை நியமித்தார்.

நீதியரசர் என்.பி.இத்தவெல, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் இந்த குழுவில் இணை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.இந்த குழு சுமார் ஒன்றரை மாதகாலமாக கூடியது.

குழுவின் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் முன்னிலையாகியிருந்தனர்.

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் 2023.12.31 ஆம் திகதியன்று மாத்தறை வெலிகம டப்ள்யூ 15 ஹோட்டல் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் குழுவின் முன்னிலையில் 30 பேர் சாட்சியமளித்திருந்தனர்.

சிறப்புக்குழு இறுதி விதப்புரை அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்திருந்த நிலையில் அறிக்கையின் சாரம்சத்தை சபாநாயகர் கடந்த மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

சிறப்புக்குழுவின் விதப்புரையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றவாளி என்று ஏகமனதாக அறிவிக்கப்பட்டு, அவரை பதவியில் இருந்து நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதற்கமைவாகவே நாளை தினம் முதல்கட்ட விவாதம் நடைபெறவுள்ளது.

-இராஜதுரை ஹஷான்

Related posts

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான பிசிஆர் வழிகாட்டுதல்கள் அமுலுக்கு

திங்கள் முதல் விசேட வேலைத்திட்டம்

SJB தலைமையில் ஒரே நேரத்தில் 150 போராட்டங்கள்