உள்நாடுபிராந்தியம்

35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..!

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் மரணமடைந்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் “தேசிய ஷுஹதாக்கள் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது.

அதற்கமைய, இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) 35வது ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள், ஹுஸைனியா மற்றும் மீரா ஜும்ஆ மஸ்ஜித்களில் நடைபெற்றன. இதன்போது, கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், ஷுஹதாக்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அத்தோடு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை காத்தான்குடி கிளை, வர்த்தக சங்கம், தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் இரு பள்ளிவாயல்களின் நிர்வாகம் ஆகியன இணைந்து ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.

அப்பிரகடனத்தில் 1985ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையான யுத்த காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் காணி இழப்புகள் தொடர்பில் ஒரு நீதியானதும் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் மஹஜர் கையளிக்கப்பட்டது.

அவ்வாறே, இன்று காத்தான்குடியில், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

-ஊடகப்பிரிவு

Related posts

பிற்பகல் 2 மணி வரையிலான வாக்குப்பதிவு விபரம்

editor

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor

இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம்

editor