உள்நாடுகல்விசூடான செய்திகள் 1

தென்கிழக்குப் பல்கலைக் கழக  பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நளீர்  

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் தற்போதைய பீடாதிபதி கலாநிதி ஹாறுனின் பதவிக்காலம் முடிவுறும் நிலையில் புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விஷேட ஒன்றுகூடல் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் 2025.08.01 ஆம் திகதி இடம்பெற்றது.

குறித்த ஒன்றுகூடலின் போதே பேராசிரியர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஆரம்பகால விரிவுரையாளர்களில் ஒருவரான நளீர், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளிலும் உதவியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கணணி விஞ்ஞான துறையில் முதலாவது பேராசிரியர் என்ற வரலாற்று இடத்தை தனதாக்கிக்கொண்ட கலாநிதி நளீர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1996 முதல் 1998 வரை உதவி விரிவுரையாளராக இணைந்து கொண்டார். பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் 1998 ஆம் ஆண்டு விரிவுரையாளராக இணைந்து கொண்டார். பின்னர் 2014 ஆம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

இதேவேளை கணணி விஞ்ஞான துறைக்கு 2015-2017 வரை இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது கணணி விஞ்ஞான துறையின் திணைக்களத் தலைவராக பணியாற்றும் கலாநிதி நளீர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிர்வாகம் சார்ந்த பிரிவுகளிலும் பணியாற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் நற்பட்டிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட
மர்ஹும்களான முன்னாள் அதிபர் அல் ஹாஜ் சுலைமாலெப்பை ஹச்சு முகம்மட் மற்றும் முன்னாள் ஆசிரியை ஹஜியாணி சின்னலெப்பை மீரா உம்மா ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில், ஐந்தாவதாகப் பிறந்த கலாநிதி நளீர் அவர்கள், தனது பாடசாலைக் கல்வியை ஆரம்பம் முதல் இறுதிவரை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கற்றிருந்தார்.

பல்கலைக்கழகக் கல்வியை இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இணைந்து 1996 இல் தனது (B.Sc.(Hons)) பட்டத்தைப் பெற்றார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் PGIS இல் இணைந்து M.Sc. in Applied Statistic ஐயும், 2009 ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் இணைந்து MPhil in Computer Science பட்டத்தையும், 2013 ஆம் ஆண்டு சீனாவின் Beijing Institute of Technology இல் இணைந்து தனது Ph. D. பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஐம்பதுக்கு மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ள கலாநிதி எச்.எம்.எம்.நளீர், 2011,2012 ஆண்டுகளில் கணணி விஞ்ஞான துறையில் சீனாவின் தலைநகர் Beijing இல் சர்வதேச விருதுகளையும் பெற்றிருந்தார்.


மீராசாய்வு மாஜிதா பேகத்தை மணந்து, நான்கு பிள்ளைகளின் தந்தையாகவுள்ள கலாநிதி நளீர், மக்கள் நலத்திட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்தி செயற்படும் சிறந்த சமூகசேவகருமாவார்.

பாறுக் ஷிஹான்

Related posts

மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

editor