கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (31) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா ஏற்பாட்டில், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கந்தசாமி பிரபு எம்.பி.தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஓட்டமாவடி, வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள், சமூகமட்ட தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான பிரதேச சபை உறுப்பினர்கள் வாழைச்சேனை மத்தி தொடர்பான காணி விவகாரங்களை பேச ஆரம்பித்த போது அதனை அவர்களை பேச விடாமல் தடுத்து உட்காருமாறு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உத்தரவிட்ட நிலையில் கூட்டத்தில் குழப்பநிலை தோன்றியது.
மக்களின் பிரச்சினைகள், தேவைகள், அபிவிருத்திகள் தொடர்பில் நாங்கள் பேச எடுத்துக்கொள்ளும் போது அதனை பிரபு எம்.பி. தொடர்ந்தும் தட்டிக்கழித்து வந்தார்.
இவ்வாறு அவர் செயற்படுவது மக்களுக்கு இழைக்கும் பாரிய அநீதியாகும்.
நீதியான அரசாங்கம் என்று சொல்பவர்கள் இவ்வாறு எங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் தட்டிக்கழிப்பது வைதனையளிக்கிறது என பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.
பிரதேச சபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திடீரென கூட்டத்தில் இருந்து பிரபு எம்.பி. எழுந்து செல்லும் போது இதுதானா உங்களுடைய நல்லாட்சி என கேள்விகள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான்