கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (26) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தம்புள்ளை பதில் நீதவான் துலாஞ்சலி சித்துமினி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
எனினும், சந்தேக நபர்களில் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணி மானைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகளை தம்புள்ளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் வனப்பகுதியில் உள்ள ஒரு மானை சுட்டுக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அத்தோடு சம்பவத்திற்கு உதவியதாக பொலிஸ் சார்ஜன்ட் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.