அரசியல்உள்நாடு

சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் விஜித ஹெராத்

மலேசியாவில் நடைபெற்ற ASEAN வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது, இலங்கைக்கு சீனா அளித்த ஆதரவுக்கு, குறிப்பாக இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில், மற்றும் சமீபத்திய பொருளாதார சவால்களின் போது சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர் விஜித ஹெராத் இலங்கை சார்பில் நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவு நாட்டின் வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் விஜித ஹெராத் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கடல்சார் விவகாரங்கள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இலங்கையின் தயார்நிலையை வெளிப்படுத்தினார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பயனுள்ள கலந்துரையாடல்கள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், ஒப்புக் கொள்ளப்பட்ட பொதுவான தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற இலங்கை ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கு மூலோபாய மதிப்புள்ள கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட ஒரு பட்டி ஒரு பாதை முன்முயற்சியின் கீழ் தொடர்ச்சியான ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, டிஜிட்டல் பொருளாதாரம், விவசாயம் மற்றும் கடல்சார் துறை போன்ற அதிநவீன துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், சீனவின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பந்துல

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை

அத்தியாவசிய மருந்து தேவைகளுக்காக ஜப்பானிடமிருந்து $1.5 மில்லியன்