கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது.
இதற்கு பதிலளித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்ட தடைகளும் இல்லையென அறிவித்தார்.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கான தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் தாம் வசித்த வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்தது.
சந்தேகநபரான ராஜிதவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை பெற்றுக் கொள்வதற்கான நகர்த்தல் பத்திரம் சமர்பித்து இதனை நேற்றுமுன்தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது.
சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தொடர்ச்சியாக தவிர்த்து வந்ததாக ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்தது. மேலும் 15 நாட்களாக சந்தேகநபரின் கைதொலைபேசியும் செயல் இழந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.
சந்தேகநபருக்கு ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு அறிவித்து அனுப்பிய கடித்ததுக்கு அவர் வர முடியாது என தெரிவித்து பதில் அனுப்பட்ட கடிதம் அல்லது மருத்துவ அறிக்கை மன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதா என நீதவான் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இதன்போது குறித்த ஆவணங்கள் முறைப்பாட்டு தரப்பினரிடம் இல்லை எனவும் அவை முறைப்பாட்டு கோப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டது.
குறித்த ஆவணங்கள் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டிய நீதவான் முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்டத்தடையும் இல்லை என குறிப்பிட்டார்.
அத்துடன் சந்தேக நபரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு அவசியம் இல்லை எனவும் பிடியாணை அவசியமாயின் அதற்கான ஆவணங்களை தயாரித்து மன்றில் சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
-சியாம்