வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் புனிதஸ்தலத்தில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நேற்று பிற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர ரஜமகா விஹாரையின் விகாராதிபதி வண, கொபவக தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.
ருஹுணு கதிர்காம தேவாலயத்தில் நடைபெறும் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெராவை பார்வையிட்ட ஜனாதிபதி, ஹஸ்திராஜா யானை மீது புனித கலசத்தை வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒரு நாட்டை அதன் வரலாற்று பாரம்பரியத்தின் அடிப்டையில் மாத்திரமே முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.
உலகில் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் ஒவ்வொரு நாடும் அதன் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் அதன் மீது கட்டியெழுப்புவதன் மூலமே அந்த வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாடாக, நாமும் நமது வரலாற்று பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நமது சமூகத்தை ஒரு கலாசார சமூகமாக மாற்ற புத்த மதம் உதவியது என்றும், பௌதீக வளங்களை முழுமைப்படுத்த முயற்சிக்கும் சமூகத்தில், மறைந்து வரும் சமூக மதிப்புகள் மற்றும் பண்புகள் மீண்டும் மீட்சிபெற, இவ்வாறான கலாசார நிகழ்வுகள் வாயப்பளிக்கிறது என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
2186 வருடங்களாக இந்த ருஹுனு கதிர்காம பெரஹரா சுமார் நூறு தலைமுறையாக நடைபெற்றுவருவதுடன், இந்த கலாசார நிகழ்விற்கும் மக்களின் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பு காரணமாகவே இந்த பெரஹராவை நடத்துவது சாத்தியமாகியுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இம்முறை பெரஹெராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களித்த விகாராதிபதி தேரர் உட்பட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் தர்மபால ஹேரத், மொனராகலை மாவட்ட செயலாளர் பசன் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு