உலகம்

ஆசியாவின் மிகவும் வயதான யானை உயிரிழந்தது

ஆசியாவின் மிக வயதான யானையான ‘வத்சலா’, நேற்று (08) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது.

அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது.

மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ​​‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.

வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, காப்புக்காட்டின் ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் வடிகால் அருகே எழுந்து நடக்க இயலாமல் படுத்துக் கொண்டது.

வனத்துறை ஊழியர்கள் இந்த யானையை தூக்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் வத்சலா யானை நேற்று பிற்பகலில் உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக, சமீப காலமாக இந்த யானை பார்வையை இழந்ததால், அதனால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை என புலிகள் காப்பகம் தெரிவித்தது.

வத்சலா யானைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ம.பி முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் பதிவில், “‘வத்சலாவின்’ நூற்றாண்டு கால தோழமை முடிவுக்கு வந்தது. இன்று (நேற்று) மதியம், ‘வத்சலா’ பன்னா புலிகள் காப்பகத்தில் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது.

அது வெறும் யானை அல்ல; அவள் நம் காடுகளின் அமைதியான பாதுகாவலர், தலைமுறைகளுக்கு ஒரு தோழி, மத்தியப் பிரதேசத்தின் உணர்ச்சிகளின் சின்னம்.

வத்சலா இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவளுடைய நினைவுகள் நம் மண்ணிலும் இதயங்களிலும் என்றென்றும் வாழும். ‘வத்சலா’வுக்கு பணிவான அஞ்சலிகள்!” என்று கூறினார்.

Related posts

கொரோனா வைரஸ் : சவுதி அரேபியாவில் முதலாவது நபர் இனங்காணல்

இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வழமைக்கு திரும்பும் நியூசிலாந்து