எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (2025.07.09) எழுப்பிய கேள்வி.
நாட்டின் நுகர்வோருக்கு தங்கள் வருடாந்த அரிசித் தேவைகளை மிகக் குறைந்த விலையில் பூர்த்தி செய்து கொள்வதற்கும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வருடாந்தம் அடுத்தடுத்த வரும் அரசாங்கங்களால் உத்தரவாத விலை மற்றும் இறக்குமதிக் கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதியளித்த பிரகாரம், தமது நெல் அறுவடைக்கு உத்தரவாத விலையைப் பெற்றுத் தரவில்லை என தற்போது விவசாயிகள் முறையிட்டு வருகின்றனர்.
எனவே, நாட்டில் நெல் உற்பத்திகளை கொள்முதல் செய்தல் மற்றும் இறக்குமதி போக்குகள் தொடர்பான அரசாங்கத்தினது கொள்கைகள் குறித்து கேட்டறியும் பொருட்டு பின்வரும் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.
01.நாட்டில் வருடாந்த அரிசித் தேவை எவ்வளவு ? அரச களஞ்சியசாலைகளில் தற்போது எத்தனை மெட்ரிக் டொன் அரிசி காணப்படுகிறது ?
02.சிறுபோகத்தினால் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கபடும் மொத்த நெல் அறுவடையை மாவட்ட மட்டத்தில் தனித்தனியாகக் குறிப்பிட முடியுமா ?
03.ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு மொத்தமாக செலவாகும் தொகையை (விதை நெல், எரிபொருள், உரம், விவசாய உபகரணங்கள் உட்பட) மாவட்ட ரீதியாக சமர்ப்பிக்க முடியுமா ?
04.இம்முறை ஒரு கிலோ நெல்லுக்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாத விலை யாது ? இதனை நாட்டரிசி, சம்பா, கீரி சம்பா மற்றும் ஈர நெல் என வேறு வேறாக சமர்ப்பிக்க முடியுமா?
05.ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு செலவாகும் தொகையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் வழங்க முடிவு செய்துள்ள உத்தரவாத விலை போதுமானது என்று அரசாங்கம் கருதுகிறதா ? இந்த விலையில் பெறப்படும் நெல்லில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை எவ்வளவாக இருக்க முடியும் ?
06.இந்த வருட சிறுபோக மொத்த அறுவடையில் இருந்து எத்தனை சதவீதத்தை அரசாங்கம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் ?
07.அறுவடைகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மொத்த ஒதுக்கீட்டுத் தொகை எவ்வளவு ? இது சிறுபோக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்ய போதுமானதா ?
08.இவ்வருடம் அரசாங்கம் எத்தனை மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது? இதற்கு செலவான தொகை எவ்வளவு ? அடுத்த சில மாதங்களில் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா? தற்போது நாட்டின் சில பகுதிகளில் நெல் அறுவடை ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில், இவ்வாறு அரிசி இறக்குமதி மூலம் விவசாயிகள் தங்கள் அறுவடைக்கு ஏற்ற நியாயமான விலையைப் பெற முடியாது போகிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?
09.பயிர் சேதங்களுக்கு விசேட காப்புறுதி திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா ? அவ்வாறு இல்லையெனில், பயிர் சேதத்தைக் குறைத்துக் கொள்வதற்கு அரசாங்கத்தினது திட்டம் யாது ?
🟩 போதுமானளவைவிடவும் மேலதிகமாக கையிருப்பில் இருக்கத்தக்க ஏன் இறக்குமதி செய்கிறீர்கள் ?
நமது நாட்டின் ஆண்டு அரிசித் தேவை 2.4 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். பெரும் போகம், சிறுபோகம் என இரு போகங்களிலும் 1,250,000 ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
பெரும் போகத்தில் 65% தேவையும், சிறுபோகத்தில் 35% தேவையும் பூர்த்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் எமது உற்பத்தி 2.8 மில்லியன் மெட்ரிக் டொன்களாக அமைந்து காணப்படுகின்றன.
மேலதிக கையிருப்பும் காணப்படுகின்றன. 100 கிலோ நெல்லின் ஊடாக 65 கிலோ அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், அரசாங்கத்திடம் அரிசி தொடர்பான தரவுகள் எதுவும் இல்லாது அல்லது மனித நுகர்வுக்கு அப்பால் வேறு நோக்கங்களுக்காக அரிசி பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
தரவுகளின் பிரகாரம், மேலதிக கையிருப்பு இருக்கத்தக்க 40,000 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. புறக்கோட்டையில் மொத்த சில்லரை வியாபாரிகள் மத்தியில் மாபியா காணப்படுகின்றது என அரசாங்கம் கூறும் நேரத்தில், அரிசியை இறக்குமதி செய்வதன் ஊடாக விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது.
உத்தரவாத விலை 120 என தெரிவிக்கப்பட்டாலும், இன்று ஒரு கிலோ நெல் 85 ரூபா அல்லது 90 ரூபாவிற்கே விற்கப்படுகின்றன. அரசாங்கத்தின் திட்டங்கள் பலவீனமாக காணப்படுகின்றன.
மறுபுறம் அரசாங்கம் இந்த அரிசி இறக்குமதிகள் மூலம் வரி வருவாயை ஈட்டி வருகிறது. இந்த முன்னெடுப்புகள் சகலதும் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான IMF நிபந்தனைகளோ என்ற பிரச்சினைத் தோற்றுவிற்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 அரசாங்கம் விவசாயியை அழித்து வருகிறது.
தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில், அரிசியின் விலையை 220 லிருந்து 230 ஆக அதிகரித்து, 2 வார காலம் ஆகுவதற்குள் 167,000 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டன. இதற்காக விதிக்கப்படும் வரிகள் குறைக்கப்பட்டபாடில்லை. ஆளும் தரப்பினர் அரச வருவாயை அதிகரிக்கச் செய்து, நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் அநீதி இழைத்து வரும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய அரசாங்கம் சமீபத்தில் அதாவது, 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக சோளத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இது 3 இலட்சம் மெட்ரிக் டொன்களாக ஆக அமைந்து காணப்படுகின்றன. கொரோனா காலத்தில் கூட, 178,000 மெட்ரிக் டொன் சோளமே இறக்குமதி செய்யப்பட்டன.
மேலதிகமாகவும் அரிசியில் தன்னிறைவு காணப்படும் சமயத்தில், அரசாங்கம் இறக்குமதி செய்வதன் மூலம் விவசாயிகளை அழித்து, நுகர்வோரை நெருக்கடிக்கு ஆளாக்கி, அரச வரிகளை ஈட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வீடியோ