உள்நாடு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவுக்கு பிணை

350 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணையில் செல்ல அனுமதித்த பிரதான நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த விசாரணை தொடர்பாக சந்தேகநபரின் மனைவியின் இரண்டு வங்கிக் கணக்குகள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்த சட்டத்தரணி நுவான் ஜயவர்தன, வங்கிக் கணக்குகள் தொடர்பான விசாரணை நடந்து வருவதால், தனது கட்சிக்காரரால் வங்கி சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தே​கநபரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

IMF அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்

சன்னஸ்கல மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை