அரசியல்உள்நாடு

வவுனியா மாநகரசபை மேயர் பக்கச் சார்பாக செயற்படுகிறது – மாநகரசபை உறுப்பினர் பிறேமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

வவுனியா மாநகரசபை மேயர் பக்கச் சார்பாக செயற்படுவதாக மாநகர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (07.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மாநகர சபையின் கன்னி அமர்வு கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது. வவுனியா மாநகரை அழகூட்டும் பொருட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்களில் ஒன்று, நடைபாதை வியாபாரிகளுக்கான இடங்களை ஒதுக்கி அவர்களுக்கான இடத்தை அடையாளப்படுத்தி வழங்கி அதன் பின் அவ் நடைபாதை வியாபாரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு புறம்பாக மாநகரசபை முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் மாநகரசபையில் உள்ள நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்க்களுக்கான கால அவகாசம் கொடுக்கப்படவில்லை. இது அரசியல் அழுத்தங்களால் செய்யப்படுகிறது.

மூவின மக்களும் சேர்ந்து வாழும் மண் வவுனியா மண். இங்கு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். அவர்களது இன ஒற்றுமையில் முறுகலை ஏற்படுத்தி இன முரண்பாட்டை ஏற்படுத்தும் முற்போக்கான செயற்பாட்டில் இவர்கள் இறங்கியுள்ளார்கள்.

எல்லோருக்கும் சமமான நீதியாகவும், நடுநிலையாகவும் செயற்பட வேண்டிய மாநகர சபை மேயர் அவர்களும், உப மேயர் அவர்களும் அரசியலுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இன மக்களுக்கு நடைபாதை வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்துக் கொண்டும், அத்துமீறி கட்டிடம் கட்டுவதற்கும் அனுமதி கொடுத்துக் கொண்டும் ஏனைய இன நடைபாதை வியாபாரிகளுககு எதிராக செயற்படுகிறார்கள்.

பள்ளிவாசலுக்கு அருகாமையில் அனுமதியின்றி கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வியாபார நிலையத்தை அகற்றாதது ஏன்? தமது பதவிக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகவா இவ்வாறு செயற்படுகிறார்கள்.

வவுனியா நடைபாதை வியாபாரிகள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. திடீரென கூறியதால் எதுவும் செய்ய முடியாது. இவர்கள் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செய்கிறார்கள் என்பது எனது கருத்து.

14 நாட்களுககு முன் அவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படவில்லை. 30 ஆம் திகதி கன்னி அமர்வில் எடுத்த தீர்மானத்திகு 6 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

குறைந்தது 15 ஆம் திகதிக்கு பின் தான் இவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த மாநகரசபையில் ஒரு இடத்தில் ஒரு இனத்திற்கு சார்பாகவும், இன்னொரு இனததிற்கு அநீதியாகவும் செயற்படுகிறார்கள்.

இது சபையில் எடுத்த தீர்மானத்திற்கு புறம்பான நடவடிக்கை. எடுத்துக் காட்டாக செயற்பட வேண்டிய இவர்கள் சில அரசியல்வாதிகளின் சொற்களை கேட்டு நடக்கிறார்கள்.

அரசியல் அழுத்தங்கள் இல்லாத மாநகர சபையை உருவாக்க வேண்டும். பசுமையான ஒரு மாநகர ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கு ஏகமனதான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இருந்தாலும் அதற்கான கால அவகாசங்கள் கொடுக்கப்படவில்லை. இது பழிவாங்கும் நோக்கம். நீதி, நேர்மை, கடமை என்பவற்றில் சரியாக நடக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தாது மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டும்.

நான் மக்களுக்காக அமைத்த குழாய் கிணற்றை தடுத்து நிறுத்தினார் முதல்வர். ஆனால் இன்று வரை அந்த குழாய் கிணறு திருத்திக் கொடுக்கப்படவில்லை.

அவர்களது அநீதிக்கு எதிராக என்னால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிததார்.

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் வேட்பாளராக களமிறங்குவாா் -அமைச்சர் பிரசன்ன

உத்தியோகபூர்வ விஜயத்தில் அலி சப்ரியின் மகன் -ஏற்பட்டுள்ள சர்ச்சை.