அரசியல்உள்நாடு

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் தெரிவு – இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கும் வகையில் மனு தாக்கல் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கும் வகையில் மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 9 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மனு இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதிகள் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உட்பட பலர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, இந்த வழக்கு தொடர்பாக தனது தரப்பினர் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

மேலும், சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தேர்ந்தெடுப்பதற்காக சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தின் காணொளி மற்றும் குரல் பதிவுகள் ஆட்சேபனைகளுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பளிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.

மேலும், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மத்துகம பிரதேச சபையிலும் இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அது தொடர்பான தகவல்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அப்போது, ​​மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சம்பந்தப்பட்ட குறிப்புகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் குழுவின் சார்பாக சட்டத்தரணி சாமர நாணயக்காரவசத்துடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நயிஜல் ஹெச், நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்குமாறு கோரினார்.

அதன்படி, மனுதாரருக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக மனுவை எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

இந்த மனுவை சம்பந்தப்பட்ட பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளதுடன், மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர உள்ளிட்ட குழுவினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சீதாவக்க பிரதேச சபையில் எதிர்க்கட்சி பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக மேல​ைமாகாண சபை ஆணையாளர்சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் 17 ஆம் திகதி கூட்டம் நடத்தப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 24 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், சம்பந்தப்பட்ட தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட பதவிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், அதை செயல்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்!

ரிஷாத் ஒருபோதும் தீவிரவாத்தில் ஈடுபடமாட்டார் – மங்கள