அரசியல்உள்நாடு

நியூசிலாந்து அரசாங்கத்தின் உயர்மட்டக் தூதுக் குழுவினர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ், பிரதி அமைச்சரும், வெளிவிவகார அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகருமான மைக்கேல் ஆப்பிள்டன், பிரதி பிரதமரின் பணியாளர் குழாம் பிரதானி கலாநிதி ஜான் ஜோஹன்சன், நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பிரிவுகளுக்கான முகாமையாளர் திருமதி ஜோனா கெம்ப்கர்ஸ், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி கேப்ரியல் ஐசக் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

நமது நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஆதரவை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது நியூசிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

வர்த்தகம், முதலீடு, தொழிற்கல்வி, மூன்றாம் நிலை கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) இன் கீழ் ஈடுபாடு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதேபோல், இலங்கையை தன்னிறைவு பெற்ற பால் உற்பத்தி நாடாக மாற்றுவதற்காக 2013 ஆம் ஆண்டு கைச்சாதிடப்பட்ட பால் கூட்டுறவு ஒப்பந்தத்தை (DCA) விரிவாக்குவது தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் நியூசிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

நவீன தொழில்நுட்பம், விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் நிலைதகு விவசாய நடைமுறைகள் மூலம் DCA-வை வலுப்படுத்துவதன் ஊடாக, காலப்போக்கில், பால் இறக்குமதியில் நாடு சார்ந்திருப்பதை தவிர்க்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும், தொழிற்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியில் நீண்டகால ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட இலங்கை- நியூசிலாந்து உயர்கல்வி மற்றும் திறன் கூட்டாண்மை செயலணியை தாபிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

உயிர்வாழும் இலங்கை யானைக் குட்டியொன்றின் முழு அளவிலான புகைப்படத்தினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸுக்கு வழங்கி வைத்தார்.

தேசிய சரணாலயத்தில் யானை குட்டியொன்று சுதந்திரமாகப் பிறப்பதை சித்தரிக்கும் இந்த புகைப்படம், இலங்கையின் பாதுகாப்பிற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் குறிப்பதோடு, இரு தீவு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பையும் குறிக்கிறது.

இச்சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஹெக்டர் அப்புஹாமி, வைத்தியர் காவிந்த ஜயவர்தன, ஹர்ஷன ராஜகருணா, மற்றும் சுரங்க ரத்நாயக்க ஆகியோரும், பேராசிரியர் கென்னடி குணவர்தன, பேராசிரியர் அமிந்த மெத்சில, கலாநிதி அதுல சமரகோன், கலாநிதி நதீஸ் டி சில்வா, கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன, திரு.தலல் ராபி, திரு.திலும் அழகியவண்ண, திருமதி கல்பனா பிராண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள இங்கிலாந்துக்கு அனுப்ப உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சதுரவுக்கு ஆணைக்குழு அழைப்பு

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு