திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக நேற்று (26) தனது பட்டத்தை மாம்பழக் கூடையில் வைத்துக் கொண்டு மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட அவர், தனக்கு இதுவரையில் எந்தத் தொழிலும் கிடைக்கவில்லை.
க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு இலங்கை அரசு தொழில் வழங்கி வருகிறது.
ஆனால் பல்கலைக்கழகம் சென்று பட்டம்பெற்ற எங்களுக்கு எந்தத் தொழிலையும் வழங்க முன்வரவில்லை என்றும் தெரிவித்து இதற்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் கூறியே மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டார்.
க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு அரச தொழில் மிகச் சுலபமாக கிடைக்கின்றன.
அவ்வாறனவர்களுக்கு தொழில் வழங்கும் செயற்பாட்டில் அதிக முக்கியத்துவத்தை அரசு கொடுப்பதாகவிருந்தால் நாங்கள் பல்கலைக்குச் சென்று ஏன் பட்டம் பெற வேண்டும்? எங்களின் பணத்தையும் ஐந்து வருடங்களையும் அநியாயமாகச் செலவு செய்திருக்கமாட்டோம்.
பட்டம் வைத்திருக்கும் நாங்கள் மாம்பழம் மற்றும் மீன் வியாபாரிகளாக தொழில் செய்ய வேண்டிய நிலைமைக்கு இன்று ஆளாகியுள்ளோம்.
ஆனால் க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்றவர்கள் அரச தொழிலை மிகச் சுலபமாகப் பெறும் நிலைமையே எமது நாட்டில் உள்ளது. இதை பார்க்கும் போது மன உளைச்சலை எங்களுக்கு ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசே எங்களின் பட்டத்துக்கு தொழில் தர வேண்டும். அல்லது எங்களின் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என்றே நான் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றும் அந்த பட்டதாரி தெரிவித்தார்.
-அபு அலா