ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட 10 பேருக்கு பேசா விசா வழங்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புனித ஹஜ் கடமையினை இந்த வருடம் நிறைவேற்ற இலங்கையிலிருந்து செல்கின்ற 3,500 ஹாஜிகளின் நலன்களை கவனிப்பதற்காக 35 பேசா விசாக்கள் சவூதி அரேபியாவினால் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த விசா, ஹாஜிகளின் நலன்களை கவனிப்பதற்காக செல்வோருக்கும், ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது வழமையாகும்.
இவ்வாறான நிலையிலேயே ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட 10 பேருக்கு இந்த பேசா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியின் அனுமதியுடனேயே குறித்த 10 பேசா விசாக்களும் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி கூறினார்.
இவர்கள் சவூதி அரேபியா செல்வதற்கான விமான டிக்கட்டோ பணமே ஹஜ் நிதியத்திலிருந்து வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் செல்பவர்கள் கட்டணம் செலுத்தமால் ஹஜ் கடமையினை நிறைவேற்றும் வகையில் சில ஹஜ் முகவர் நிறுவனங்களுடன் அரச ஹஜ் குழு பேச்சு நடத்தி அவர்களை இணைத்து விட்டுள்ளதாக குறித்த உயர் அதிகாரி கூறினார்.
இந்த 10 பேரில் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அமைச்சரின் சிபாரிசில் சென்றவர்களுக்கு விமான டிக்கட் ஹஜ் நிதியத்தினால் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, அரச ஹஜ் குழுவின் நான்கு உறுப்பினர்கள், வக்பு சபையின் உறுப்பினரொருவர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஆறு பேருக்கும் பேசா விசா வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஹஜ் குழுவிலுள்ள இந்த 11 பேரும் ரியாதிலுள்ள இலங்கை சவூதி தூதுவராலயம் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை ஹாஜிகளின் நலன்களை கவனிப்பார்கள் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இவர்களுக்கு இரு வழி விமானச் சீட்டு மற்றும் சுமார் 350,000 ரூபா பணமும் ஹஜ் நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக இவர்கள் சவூதி அரேபியாவில் தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த காலங்களில் ஹாஜிகளின் நலன்களை கவனிப்பதற்காகச் செல்லும் ஹஜ் குழுவின் உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு இரு வழி விமான டிக்கெட் மற்றும் சுமார் எட்டு இலட்சம் ரூபா பணமும் வழங்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதற்கு மேலதிகமாக ஹஜ் குழுவின் சிபாரிசின் பேரில் ஒருவருக்கும் ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட்ட 92 ஹஜ் முகவர் நிறுவனங்களுக்காக 13 பேசாக்களும் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
-றிப்தி அலி