அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | “ஜனநாயகத்தை விலைபேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – ரிஷாட் எம்.பி

உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மாற்றம் செய்யாவிட்டால், ஜனநாயகம் விலைபேசப்படுவதை நிறுத்த முடியாமல் போய்விடுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் (21) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;

“நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், எமது கட்சி நாடு முழுவதும் 140 ஆசனங்களை வென்றுள்ளது. இந்த வெற்றிக்காக வாக்களித்த சகலருக்கும் எனது நன்றிகள். எந்த வெற்றியைப் பெற்றாலும் பல சபைகளில் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரிய கட்சிகள், சுயேச்சைக் குழுக்களிடம் மண்டியிடும் அல்லது மன்றாடும் நிலையையும் இந்த தேர்தல் முறை ஏற்படுத்தியுள்ளது. எனக்குத் தெரிந்தவரை கற்பிட்டியில் ஒரு உறுப்பினருக்கு 25 இலட்சம் ரூபா தருவதாகவும் விலை பேசப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகத்தை விலை பேசும் இந்த தேர்தல் முறையை மாற்றுங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் புத்தளம் – மன்னார் பாதையை இந்த அரசாங்கம் நிரந்தரமாக மூடிவிட்டது. இப்பாதை மூடப்பட்டதை இனவாதமாகவே பார்க்கிறோம். ஏற்கனவே திறக்கப்பட்டிருந்த இந்தப் பாதையை மூடுமாறு, இனவாத அரச சார்பற்ற நிறுவனங்களே வழக்குத் தொடர்ந்தன.

ஹம்பாந்தோட்டையில் அல்லது குருநாகலில் இவ்வாறான பாதையை மூடுவார்களா? இந்தப் பாதையைத் திறந்து தருவதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தனர். இவையெல்லாம் காற்றில் பறந்துவிட்டன.

இப்போது நீதித் துறை இப்பாதை விவகாரத்தில் தலையிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை மீள் பரிசீலனை செய்ய ஐந்து நீதியரசர்கள்கொண்ட குழாமை நியமிக்குமாறு கோருகின்றேன். இனவாதிகளுடன் வாழ முடியாதென்பதற்காக ஒரு யுத்தத்தையே எதிர்கொண்ட நாடிது. இதனால், பல சமூகத்தினரும் அழிந்தனர். நானுட்பட எனது முஸ்லிம் சமூகமும் அகதியானது.

மேலும், மக்களின் பிரதிநிதிகளான எமது பாதுகாப்புக்கு இரண்டு பொலிஸாரையாவாது தாருங்கள். ஆங்காங்கே கண்டெடுக்கப்படும் ஆயுதங்கள், யாரைக் குறிவைப்பதற்கு கொண்டுவரப்பட்டவையோ தெரியாது. வீதிகளில் பயணிக்கும்போது குடி வெறியர்களையும் எதிர்கொள்கிறோம்.

எனவே, எங்களை பாதுகாருங்கள். எதைச் சொன்னாலும் இந்த சபாநாயகர் கேட்பதாக இல்லை. நான் 24 வருடங்கள் கண்டிராத ஒரு பொம்மை சபாநாயகரையே இப்போது காண்கிறேன்.

ஆறு மாதங்களாகியும் எங்களை எந்தவொரு கூட்டங்களுக்கும் அழைக்கவில்லை. பன்முகப்படுத்தப்ட்ட நிதியிலிருந்து ஒரு சதக் காசையாவது மக்களின் அபிவிருத்திகளுக்கு வழங்கவில்லை” என்று கூறினார்.

-ஊடகப்பிரிவு

வீடியோ

Related posts

உக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

editor

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி