அரசியல்உள்நாடு

40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – பிரதமர் ஹரிணி வௌியிட்ட தகவல்

நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (21) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது,

அரசாங்கப் பாடசாலைகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 4,240 சிங்கள மொழி ஆசிரியர் வெற்றிடங்களும், 2,827 தமிழ் மொழி ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன. ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை 11,274 சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும், 6,121 தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன.

மேல் மாகாணத்தில் மட்டும், அரசாங்கப் பாடசாலைகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 1310 சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் 302 தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை 1325 சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும், 397 தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன.

கல்வி அமைச்சில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் போது பரீட்சை முறை மூலம் நிரப்ப அரசாங்க சேவை ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் சேர்ப்பது தொடர்பாக தற்போது நீதிமன்ற வழக்கு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு, ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் தற்போதுள்ள வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது நிரப்ப அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Related posts

இஸ்லாம் பாடநூல்களை உடனடியாக மீளப் பெறுமாறு கோரிக்கை

மேலும் ஒரு தொகை Sputnik V இலங்கைக்கு

ஜனவரி 15 முதல் வடக்கிடக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்