அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி சார்பற்ற ஆட்சியமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – தயாசிறி ஜயசேகர எம்.பி

அனைத்து அரசியல் கட்சிகளையும் திருடர்கள் என தெரிவித்த தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி சார்பற்ற ஆட்சியமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருணாகல் பிரதேசத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கம் தோலிவியடைந்துள்ளது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களில் மக்களினால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திகழ்கிறது.

பொதுத் தேர்தலில் அரசாங்கத்துக்கு 68 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

ஆனால் இந்த தேர்தலில் 23 இலட்சத்துக்கும் அதிக வாக்குகள் குறைவடைந்துள்ளன. இது அரசாங்கத்துக்கு பாரிய வீழ்ச்சியாகும்.

தேர்தலில் 269 உள்ளூராட்சி மன்றங்களை வெற்றிகொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வந்தாலும் அவர்களுக்கு 116 மன்றங்களிலேயே ஆட்சியமைக்க முடியும்.

140க்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அந்த சபைகளில் தேவையான பெரும்பான்மை இல்லை.

தேர்தலில் சுயாதீன குழுக்கள் வாக்குகளைப் பெற்று, அவர்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத சக்தியாக அவர்கள் மாறி இருக்கும் நிலையில், அவர்களை பயன்படுத்தி அல்லது அவர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்க அரசாங்கம் எதிர்பார்த்து இருக்கிறது.

இதற்காக அரசாங்கம் சுயாதீன குழுக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் மற்றும் சன்மானங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்து இருக்கிறது.

குருணாகல் பண்டுகஸ்நுவர உள்ளூராட்சி மன்றத்துக்கு அரசாங்கத்துக்கு 17 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் எதிர்கட்சிகளுக்கு 21 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்களும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த சபையில் ஆட்சியமைக்க எங்களுக்கு முடியுமாகி இருக்கிறது.

அதனால் தேசிய மக்கள் சக்திக்கு தனித்து ஆட்சியமைக்க முடியாத அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, சபைகளின் தலைவர், உபதலைவர் பதவிகள் தொடர்பில் சிந்திக்காமல் கட்சி சார்பற்றவகையில் ஆட்சியமைக்க, தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

இன்று முதல் அமுலுக்கு வரும் மில்கோ பால் மாவின் விலை குறைப்பு.

editor

ஜனாதிபதி வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

பாடசாலைகளை திறப்பதற்கு முன் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு