உலகம்

12 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் – ஹமாஸின் முக்கிய தலைவர்கள் பலி – நிரம்பி வழியும் காசாவின் மருத்துவமனைகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் செயல்படவில்லை எனக்கூறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது.

காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அதிரடி தாக்குதலை நடத்திய நிலையில் காசா அரசின் ஹமாஸ் தலைவர், அமைச்சர், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் இயக்குநர் ஜெனரல் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, உயிரை காப்பாற்ற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுகின்றனர்.

கடந்த ஜனவரியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இந்த போர் என்பது நிறுத்தப்பட்டது.

இதனால் காசா மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர். ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் இருந்து கொண்டே தான் இருந்தது.

இப்படியான சூழலில் தான் இன்று காசா மீது இஸ்ரேல் அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. காசாவின் 12 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் விமானங்கள் குண்டுகளை வீசின.

காசாவில் உள்ள டேர் அல் பாலா, கான் யூனிஸ், ராஃபா மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

இதில் ஏராளமான மக்கள் இறந்தனர். குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதால் குழந்தைகள், பெரியவர்கள் என்று பொதுமக்களும் கொத்து கொத்தாக பலியாகி உள்ளனர்.

மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதன்படி காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இசாம் அல் தல்லிஸ், உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சகத்தின் தலைவர் மகுத் அபு வாட்ஃபா, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் அதிகாரியான டைரக்டர் ஜெனரல் பஜாத் அபு சுல்தான் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை ஹமாஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛காசாவை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் சியோனிஸ்ட் விமானப்படை நடத்திய தாக்குதலில் இந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையிலான சூழல் அங்கு இல்லை. மருத்துவமனையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மருந்து, மாத்திரை தட்டுப்பாடு உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை என்பது அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related posts

 ஒடுக்குமுறை அனுபவிப்பவர்களுக்கு கனடா அடைக்கலம்!

ஈரான்-மாலைத்தீவுகள் இடையே மீண்டும் தூதரக உறவு!

சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் கணக்குகள் 170 000 நீக்கம் : டுவிட்டர் அதிரடி