அரசியல்உள்நாடு

கடந்த கால அரசியல் கட்சிகள் முன்னெடுத்தது போன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுகின்றது – சாணக்கியன் எம்.பி

கடந்த கால அரசியல் கட்சிகள் முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இது ஆரோக்கியமான விடயம் அல்ல இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகயிருந்த வரும் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.மு.இராசமாணிக்கத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையின் புறநகர் பகுதியில் உள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (20) நடைபெற்றது.

சீ.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நாவற்கேணியில் நடைபெற்றது.

போதகர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சீ.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின்போது நூறுக்கும் அதிகமான மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டினை இன்னும் ஆரம்பிக்கவில்லை.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டுவரையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் வரைவில் தாங்கள் இணங்கிய விடயங்களைக்கொண்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தாலும் கூட தற்போது அவர்கள் என்ன மன நிலையிலிருக்கின்றாகள் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது.

அந்தவகையில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் அரசாங்கத்திற்கு புதிய அரசியலமைப்பினை விரைவுபடுத்துவதற்கு பாரிய அழுத்தங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அரசியலமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதில் இலங்கை தமிழரசுக்கட்சி 75வருடமாக பல முன்னெடுப்புகளை முன்னெடுத்துவந்துள்ளது.

அந்த வகையில் பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஆராய்ந்து அரசாங்கத்துடனும் இவ்விடயங்களை முன்னெடுப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

ஏழு பேர் கொண்ட குழு புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களை முன்னெடுப்பதற்காக தீர்மானம் எடுத்திருந்தது.

அதேபோல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் நடைபெறாமலிருக்கின்றது.

இதனால் அரச ஊழியர்களாக இருந்த பலர் பல கஷ்டங்களுக்கு முகங்கொடுத்தார்கள். சம்பளம் அற்ற விடுமுறையில் பலமாதங்கள் இருந்தனர்.

தாங்கள் வேலை செய்த பிரதேச செயலகமோ அல்லது கல்வி வலயமோ அல்லது மாவட்டத்தையோ தாண்டி வெளி மாவட்டத்தில், வெளி பிரதேச செயலகங்களில் வெளி வலயங்களில் வேலை செய்ய வேண்டிய கஷ்டங்களுக்கு முகங்கொடுத்தார்கள்.

கிராம சேவையாளர்களுக்கான புதிய நியமனங்கள் வழங்கிய பொழுது ஒரு கட்சியிலே வேட்பாளராக இருந்த காரணத்தினால் அவர்களுக்கு அந்த புதிய நியமனங்கள் கிடைக்கவில்லை.

சிலர் தங்களுடைய நிதியை செலவிட்டு கட்சிக்காக பரப்புரையில் ஈடுபட்டார்கள்.

இவ்வாறானவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.

கட்சியின் தீர்மானங்களை மீறி வேறு கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்கள், வேறு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்கள், உயிரிழந்தவர்கள், வெளிநாடு சென்றவர்கள் மற்றும் விருப்பமில்லாதவர்களை மாற்றி அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது தொடர்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதேபோன்று கட்சியிலே ஒழுக்காற்று விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் பேசப்பட்டது. சிலருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் சிலருக்கு இருந்த சந்தேகங்கள் தொடர்பிலும் பூரணமான பதில்கள் வழங்கப்பட்டன.

கட்சித் தீர்மானத்தை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்வதாகவும் சொல்லப்பட்டது. நான் 2020ஆம் ஆண்டிலிருந்துதான் மத்திய செயற்குழு உறுப்பினராக இருக்கின்றேன்.

முதலாவது முறையாக ஒரு அமைதியான ஆக்கபூர்வமான மத்திய செயற்குழுக் கூட்டத்தை நான் கண்டிருந்தேன். நாங்கள் ஒற்றுமையாக விவாதங்களை முன்னெடுத்து ஒற்றுமையாக சில தீர்மானங்களை எடுக்கும் நிலையிருந்தது.

தமிழரசுக்கட்சி ஓரு ஆரோக்கியமான பாதையில் செல்கின்றது. சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். கட்சியென்றால் ஒரு கட்டுப்பாடு இருக்கவேண்டும்.

ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து சிலர் முட்டாள்தனமான கருத்துகளையெல்லாம் முன்வைப்பார்கள். ஆனால் ஒரு கட்சியானது கட்டுக்கோப்புடன் செயற்படவேண்டும்.

தமிழரசுக்கட்சியை எதிர்காலத்தில் இன்னும் பலமானதாக கட்டியெழுப்புவோம்.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் அதற்கு ஆரம்பமாகயிருக்கும்.

தெற்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல விடயங்களை சொல்லியிருந்தார்.
ஜனாதிபதி அவர்கள் ஒரு விடயத்தினை மனதில் கொள்ள வேண்டும் அவர் தற்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அவர் கடந்தகாலத்தினைப்போல் நாட்டில் உள்ள பிரச்சினைகளை மேடையில் வந்து பேசி விட்டுச் செல்வது மட்டும் போதாது.

அனைருக்கும் பிரச்சினை தெரியும். நேற்று 73 ஆயுதங்கள் இராணுவத்திடமிருந்து களவுசென்றுள்ளதாக கூறியிருக்கின்றார்.

களவுசென்றால் அதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும். இதுபோலவே கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழல்செய்த அதிகாரிகளுக்கு மேலும் பதவி உயர்வுகள் இந்த அரசாங்கத்தில் வழங்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு பதவி உயர்வுகளும் தங்களது இருப்புகளை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.

இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் எனது கடுமையாக பேசவுள்ளதுடன் ஜனாதிபதியை சந்தித்தும் இது தொடர்பில் பேசவுள்ளேன்.

கடந்த கால அரசுகள் கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல.

அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த நாட்டினை கட்டியெழுப்பவேண்டும் என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பேசினார்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரச்சினைகளுக்கு நீதிவேண்டும் என்று பேசும் அதிகாரிகளை பழிவாங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோன்று கடந்தகாலத்தில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பால்மாவினை கொள்ளையடித்த பிரதேச செயலாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதுடன் பிள்ளையான் காணிகளை அபகரிப்பு செய்ய உதவிய பிரதேச செயலாளர்களுக்கு பதவி உயர்வுகள் எல்லாம் வழங்கப்படப்போவதாக அறிகின்றோம்.

ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியாக செயற்பட்டு இந்த விடயங்களுக்கு சிறந்த முடிவுகளை வழங்கவேண்டும்

Related posts

ஹிட்லரின் இனவெறிப் பேச்சுக்களையும் மிஞ்சி : முஸ்லிம்களுக்கு எதிராக பேசும் மோடி

BUREVI : கடுமையான பாதிப்புக்கள் இதுவரை பதிவாகவில்லை

நேற்று 557 கொரோனா நோயாளர்கள் அடையாளம்