வகைப்படுத்தப்படாத

எந்த ஒரு தீவிரவாத சக்திகள் வந்தாலும் என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் -அமைச்சர் மனோகணேசன்

(UDHAYAM, COLOMBO) – காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தனது அமைச்சில் பொதுபல சேனையினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சக அமைச்சர்கள் ஆகியோரது கவனத்துக்கு இந்த விடயங்களை அமைச்சர் மனோ கணேசன் கொண்டுவந்தார்.

தனது அமைச்சுக்குள் அல்லது எங்கேயும் எந்த ஒரு தீவிரவாத சக்திகள் வந்தாலும் தன்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறினார்.

எனது அமைச்சுக்கு சிங்கமாக வந்த பொதுபலசேன அதிபர் ஞானசார தேரர் பூனையாக திரும்பி போனார். ஆனால், சாதாரண மக்களின் நிலைமை அதுவல்ல. அவர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

2015ம் வருடம் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஆகிய கட்சிகளுக்கு நல்லாட்சிக்காக வாக்களித்த சிறுபான்மை மக்களை, எமது அரசாங்கத்திடமிருந்து பிரித்து, எதிர்வரும் தேர்தல் காலங்களில் வாக்களிக்காமல், அவர்களை வீட்டில் இருக்க செய்யும் திட்டமே இதுவாகும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

அமைச்சரின் கருத்துகளை தொடர்ந்து, அமைச்சர்களான ரிசாத் பதுயுதீன், கபீர் ஹசீம், ரவூப் ஹக்கிம், துமிந்த திசாநாயக்க, சாகல ரத்னாயக்க ஆகியோரும் இது குறித்து பேசினர்.

இவற்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி,

சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பினார். தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் முறையில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,

சம்பவங்கள் நடைபெறும் பிரதேசங்களில் பொறுப்பில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளை இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பு கூறவைக்கும் நடைமுறையை உடனடியாக அமுல் செய்யுமாறு, சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.

தன்னை நேற்று முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்ததாக அமைச்சர் சாகல ரத்நாயக்க அமைச்சரவைக்கு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி , இதை முஸ்லிம் பிரச்சினையாக பார்க்காமல், சட்டம், ஒழுங்கு பொது பிரச்சினையாக பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related posts

சொத்து தகராறில் பலியான உயிர்

Ranjan apologizes to Maha Sangha for his controversial statement

கேப்பாப்புலவு 189 ஏக்கர் காணிகள் விடுவிப்பு