அரசியல்உள்நாடு

கட்சியின் தலைவர் யார் ? கூட்டத்தில் குழப்பநிலை – சுமந்திரன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சனிக்கிழமை (14) இடம்பெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (14) காலை10.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெற்றது.

இதன்போது கூட்டம ஆரம்பிக்க முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகைதராமல் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

இதனால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. பின்னர் மாவை சேனாதிராயா கூட்டத்திற்கு வருகைதந்திருந்தார். அதனைத்தொடர்ந்து கூட்டம் ஆரம்பமாகியது.

இந்தநிலையில் மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதால் அவருக்கு பதிலாக வேறொருவர் தலைவராக நியமிக்கப்படவேண்டும் என்று ஒரு தரப்பினர் கேட்டுக்கொண்டதுடன், மற்றொருதரப்பினர்

அவரே தொடர்ச்சியாக தலைவராக செயற்படவேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இதனால் இன்றைய கூட்டம் முழுவதும் அந்த விடயம் தொடர்பாகவே பேசப்பட்டதுடன், முடிவுகள் எடுக்கப்படாமல் பிறிதொருநாள் அதனை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

கட்சியின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி எழுந்தது. மாவை சேனாதிராஜா கடந்த ஒக்டோபர் மாதத்திலே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அதன்பிறகு இடம்பெற்ற அரசியல் குழு கூட்டத்தில் அது தொடர்பாக செயலாளர் அவரிடம் தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார். கடிதமும் அனுப்பியிருந்தார். இருப்பினும்அவர் அதற்கு பதில் சொல்லியிருக்கவில்லை.

இதனால் செயலாளர் அவரது ராஜினாமா நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு அடுத்தகட்டநடவடிக்கையினை மேற்கொள்வதாக அவருக்கு அறிவித்திருக்கிறார்.

அதன்பின்னர் தனது ராஜினாமாவை மீள கைவாங்குவதாக அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளதாக காட்டப்படும் ஒரு கடிதம் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மூலம் செயலாளருக்கு அனுப்பபட்டிருந்தது.

அதற்கு மறுநாள் மாவை அவர்களும் செயலாளருக்கு அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார்.

எனவே அவர் ராஜினாமா செய்திருப்பதால் கட்சியின் அடுத்த மாநாடுவரைக்கும் எஞ்சியிருக்கிற காலத்துக்கு மத்தியசெயற்குழு ஒருவரை தலைவராக நியமிக்க முடியும் என்ற எமது யாப்பின் அடிப்படையில் சிவிகே சிவஞானம் அவர்களை அந்த பதவிநிலைக்கு நியமிக்குமாறு முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.

இதேவேளை சேனாதிராஜா தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றிருக்கிறார் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற மாற்று முன்மொழிவும் சொல்லப்பட்டது.

இதனால் குறித்த விடயம் தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது.

எனவே இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விடும்படியாக அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தரப்பினர் கேட்டுக்கொண்டனர்.

இறுதியில் அது வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் அதற்காக இன்னொரு கூட்டத்தை கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் யார் என்று தெரியாத ஒரு நிலையிலே தான் அடுத்த கூட்டம் வரைக்கும் கட்சி பயணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்றார்.

Related posts

மக்கள் பட்டினியால் பலியாவதா? ஐ.நா எச்சரிக்கை

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

editor

கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி

editor