உள்நாடு

மிகவும் கடினமான சூழலில் தமிழர்கள் உள்ளீர்கள்- தமிழ் எம்பிக்களிடம் அமெரிக்க தூதுவர்

தமிழர்களாகிய நீங்கள் தற்போது மிகவும் கடினமான சூழலில் உள்ளீர்கள் என்பதனை நாம் ஏற்கின்றோம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (15) விசேட சந்திப்பு நடைபெற்றுள்ள நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேற்படி சந்திப்பில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் விவகாரம் தொடர்பிலேயே அமெரிக்கத் தூதுவரால் அதிக அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு விடயம் குறித்து ஜூலி சங் வினவியுள்ளார்.

இந்நிலையில், பொது வேட்பாளர் விடயத்தில் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்ட மூவரும் மூன்று நிலைப்பாடுகளில் காணப்பட்டுள்ளனர்.

“ஜனாதிபதித் தேர்தலில் முன்பு சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ என வாக்களித்து ஏமாற்றமே அடைந்தோம். அதனால் பொது வேட்பாளர் வேண்டும். இதனைத் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் களமாகவும் பயன்படுத்தலாம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், “பொது வேட்பாளர் விடயம் பொருத்தமற்ற ஒன்று என்பதே தனது நிலைப்பாடு. இருப்பினும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபித்து ஓர் தீர்மானத்தை எட்ட முடியும்” என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மௌனம் காத்துள்ளார்.

இதேநேரம், “நில விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயம், பொறுப்புக்கூறல், மனித உரிமை போன்ற விடயங்களில் நாங்கள் பல விடயங்களை இலங்கை அரசிடம் கூறியுள்ளோம். அவர்கள் செய்வதாக இல்லை.

இந்நிலையில், மிகவும் கடினமான சூழலில் தற்போது நீங்கள் (தமிழர்கள்) உள்ளீர்கள் என்பதனை ஏற்கின்றோம். இருப்பினும் நாம் தொடரந்தும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்று அமெரிக்கத் தூதுவர் பதிலளித்துள்ளார்.

மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவர் வினவியபோது, “அதனைத் தனிப்படப் பேசுவதே பொருத்தமானது.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

editor

மலேசியாவின் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து !

சிலர் அரசியல் இலாபங்களுக்காக விமர்சிக்கின்றனர் – பிரதமர் ஹரிணி

editor