உள்நாடு

“Women in Politics” அங்குரார்ப்பணம் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர

(UTV | கொழும்பு) –   பெண்களுக்கு சுயமாகவே தீர்மானங்களை எடுக்கும் தகுதியும் வாய்ப்பும் சிறு வயது முதல் வீடுகளில் உள்ளது. அதேபோல், பாரிய பொறுப்புணர்ச்சியுடனும் மகளிர்கள் வீடுகளில் செயற்படுகிறார்கள்.

இவ்வாறு வீட்டை அவர்களுக்கு சிறந்த முறையில் நிர்வகிக்க முடிமாக இருந்தால், பிரதேச சபையில் ஒரு உறுப்பினராக இருந்து செயற்படுவதும் அவ்வளவு கடினமான காரியமில்ல. அதுவும் பொறுப்புடன் செயற்படவேண்டிய மிகவும் எளிதான, இலேசான ஒரு காரியமாகும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் தேசியப் பட்டியலில் தெரிவாகுவதைவிட, தேர்தலில் போட்டியிட்டு 25 வீதமான பெண்களாவது உறுப்பினர் பட்டியலில் முன்னிலை வகித்து வெற்றி பெறுவதையே தான் பெரிதும் விரும்புவதாகவும், இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பிலான பயிற்சிப் பட்டறை ஒன்று, உள்ளூராட்சி மன்ற மகளிர் உறுப்பினர்களுக்கு, கடந்த (03) புதன்கிழமை, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி மன்ற இலங்கை பயிற்சி நிறுவகம், OTI (One Text Initiative) நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்திய இப்பயிற்சிப் பட்டறை, DEMO Finland நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் இடம்பெற்றது.

இப்பயிற்சிப் பட்டறை யில் நாடளாவிய ரீதியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து கலந்து கொண்ட 133 உள்ளூராட்சி மன்ற மகளிர் உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சரினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

“Women in Politics” என்ற பெயரிலான இணையத் தளம் ஒன்றையும் ஆரம்பித்து வைத்து, இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தொடர்ந்தும் இச்சிறப்பு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

பெண் உறுப்பினர்களில் பெரும்பாலானோர், தேசியப் பட்டியல் மூலமாகவே தெரிவாகி உள்ளனர். இது அவ்வளவு வரவேற்கக் கூடயதல்ல. எனினும், இவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட்டு, அதன் மூலமாகவே தெரிவாக வேண்டும். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீத அடிப்படையில் தெரிவாக வேண்டும் என்பதே, எனது பாரிய எதிர்பார்ப்பாகும்.

உள்ளூராட்சி மன்ற ஆண் உறுப்பினர் அல்லது பெண் உறுப்பினர் ஒருவருக்கு, எந்த வகையிலும் அவர்களது மக்கள் சேவைகளைப் புறக்கணிக்க முடியாது. அவர்கள் மிகவும் பாரிய பொறுப்புணர்ச்சியுடன் மக்களுக்கு பணி புரிய வேண்டும்.

பிரதேச சபையின் தலைவர் எங்களுடைய ஒருவர் என்றில்லாமல், அவருக்கு தேவை ஏற்படுமிடத்து, அவருடைய எல்லைப் பகுதியில் சேவையாற்ற அவருக்கு பூரண அதிகாரமுள்ளது. இது அவரது கட்டாயக் கடப்பாடுமாகும்.

இதன் காரணமாக, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் முறைமை மாற்றத்தின் பின்னர், உள்ளூராட்சி மன்றங்களில் தலைவர் பதவி வகிப்பதை இரண்டு முறைக்கு மட்டுப்படுத்துவதற்கு, தான் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல், உள்ளூராட்சி மன்றங்களில் கமிட்டி குழு முறைமை மற்றும் புதிய கமிட்டி குழுக்களை உருவாக்கல், சபை நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தல், உள்ளூராட்சி மன்ற மகளிர் உறுப்பினர்களின் அதிகாரங்கள், அவர்களது கடமைப் பொறுப்புக்கள் மற்றும் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், மகளிர் பிரதி நிதிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் நேரடியாகவே கலந்துரையாடல்களை நடாத்தல் மற்றும் அவர்களது தலைமைத்துவம் தொடர்பில் கலந்தாலோசித்தல், பிரதேச அபிவிருத்தி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட மேலும் பல்வேறு விடயதானங்கள் குறித்தும் இப்பயிற்சிப் பட்டறையின்போது, உள்ளூராட்சி மன்ற மகளிர் உறுப்பினர்களுக்கு துள்ளியமாக விளக்கமளிக்கப்பட்டன.

“உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் தீர்மானங்களை எடுக்கும்போது, அங்கு வருகை தரும் பெண் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களது வருகையை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்துவது”, இக்கருத்தரங்கின் பிரதான அம்சமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், முன்னாள் பிரதி அமைச்சர் சுதர்ஷனீ பெர்னாண்டோ புள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி குமாரி கவிரத்ன, ராஜிகா விக்கிரமசிங்க, OTI நிறுவனத்தின் வர்த்தகத்துறை பணிப்பாளர் தலதா அபே குணவர்தன, உள்ளூராட்சி மன்ற இலங்கை பயிற்சி நிறுவகப் பணிப்பாளர் -பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி சுரதிஸ்ஸ திஸாநாயக்க உள்ளிட்ட மேலும் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

– ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை நிருபர் )

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான தொற்றாளர்கள் விபரம்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகருக்கு விளக்கமறியல்

editor

பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை