9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன.
இதன் போது அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறி சிறு விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பாடசாலை அதிபர் தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிரம்புகள் உடையாத அளவுக்கு பிள்ளைகளின் முதுகில் கொடூரமாக அடித்துள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். பின்னர் பெற்றோர்கள் பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் காண முடிந்தது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தபோது அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் குழு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது.
எனினும் இன்று சிறுவர் மறுவாழ்வு மையம் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இந்த பிள்ளைகள் மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இதே வேளை அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என கூறினார்.
தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் ஒரு தாய்
நாங்கள் எங்கள் குழந்தைகளை கற்றுக்கொள்ள பள்ளிக்கு அனுப்புகிறோம். குழந்தைகள் வித்தியாசமான செயல்களைச் செய்பவர்கள்.
இந்தக் குழந்தைகள் சிறு வயதுடையவர்கள்.
கால்நடைகளை அடிப்பது போல் அவர்களை அடிக்க முடியுமா?’ என்று கூறினார். என் குழந்தைகள் அந்தப் பள்ளிக்குத் திரும்பப் போக முடியாது என்கிறார்கள்.
எங்கள் பிள்ளைகள் இம்முறை தரம் 5 பரீட்சை எழுதுகிறார்கள். அந்தக் குழந்தைகளின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது?என்றார்.
தாக்குதலுக்கு உள்ளான பிள்ளை இது குறித்து கருத்து தெரிவிக்கையில்
நாங்கள் இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்றதாகவும் பல பிள்ளைகள் தண்ணீரைப் பயன்படுத்தி விளையாடி கொண்டிருந்ததாகவும் கூறினார்.
நாங்கள் வகுப்புக்குத் திரும்பியதும் வகுப்பு ஆசிரியர் பாடசாலை அதிபரான துறவியிடம் இதைப் பற்றிச் சொன்னார்.
அதன் பிறகு அவர் மூன்று பிரம்புகளைக் கொண்டு வந்து எங்கள் முதுகு வலிக்கும் வரை அடித்தார்.
நாங்கள் சத்தமாக அழுதோம் ஆனால் அவர் எங்களை அடித்தார் அடிக்க வேண்டாம் என்று சொன்னோம். அவர் எங்களை அடித்தார். எனவே இப்போது இந்தப் பள்ளிக்குப் போக முடியாது என்றார்.
-பாறுக் ஷிஹான்