5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் முன்னெடுத்து வரும் தேடுதலின் போதே குறித்த 2 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.
அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று (15) மாலை வத்தளை பொலிஸ் பிரிவின் பங்களாவத்த பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது சுமார் 309 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களால் வாடகைக்கு பெறப்பட்டிருந்த வீட்டின் அறை ஒன்றிலேயே கேரள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.