இலங்கை கல்வி நிர்வாக சேவையில் நியமனம் பெற்ற 45 புதிய அதிகாரிகளை அரச நிறுவனங்களுக்கு நியமிப்பதற்குகான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (05) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III ஆம் தரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் இந்த அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தனர்.
சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தில் இலங்கை நிர்வாக சேவையின் 58 அதிகாரிகளின் வெற்றிடங்கள் காணப்பட்டன.
புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதன் மூலம் நிலவி வந்த நிர்வாக சிக்கல்கள் சமநிலைப்படும் என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.
புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் அரச நிறுவனங்களில் சேவையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 14 பேர் வேறு மாகாணங்களுக்கு விடுவிக்கப்படுவார்கள் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ.சுனிதா, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுணுஆரச்சி, சப்ரகமுவ மாகாண அரசசேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் தினீஷா ரத்நாயக்க, சப்ரகமுவ மாகாண விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் தர்ஷன சமரசேகர, சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் புஷ்பகுமார டயஸ், சப்ரகமுவ மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான புஷ்பகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
