ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவரை மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வில்பத்து, ரிடிகல மற்றும் மகியங்கனை வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் நேற்று (17) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் பல மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், ஒரே இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டிலேயே இதுவே மிகப்பெரிய கஜமுத்துத் தொகுதி என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அங்கிருந்து 30 கஜமுத்துக்கள், சிறுத்தையின் தோலின் பகுதிகள், யானைத் தந்தத்தின் பகுதிகள், சிறுத்தையின் எண்ணெய், கருங்காலி மரப் பகுதிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, விலங்குகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் பொறிகள் மற்றும் வனவிலங்கு, வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையாகப் பாதுகாக்கப்பட்ட தாவரமான தம்பு (Dambu) தாவரத்தின் பகுதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையில், சந்தேகநபர் யானைத் தந்தங்களைப் பயன்படுத்தி பல்வேறு கலைப் பொருட்களை தயாரித்து நீண்டகாலமாக இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வனவிலங்கு அதிகாரிகளின் பொறுப்பில் வைத்து விசாரணைகள் முடிவடைந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.