வாகன உதிரிப் பாகங்களுக்குள் மறைத்து 210 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்கத்தை கடத்திய இரண்டு தொழிலதிபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டனர்.
விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளால் ‘ரெட் செனல்’ வருகை ஓய்வறை வழியாகச் செல்லும்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸில் வசிக்கும் 26 வயதுடையவர், மற்றையவர் கண்டி ரம்புக்வெல்லவைச் சேர்ந்த 46 வயதுடையவர்.
உள்ளூர் வர்த்தகர்களின் சார்பாக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொண்டு வருவதில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் துபாயிலிருந்து காலை 8:30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.
இதன்போதே 6.7 கிலோகிராம் எடையுள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு வாகன தாங்கி அமைப்புகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 தங்க பிஸ்கட்களும் வாகன குளிரூட்டும் அமைப்பின் நீர் குழாய் பாகங்களுக்குள் பொருந்தும் வகையில் உருக்கி வடிவமைக்கப்பட்ட பல தங்கக் கட்டிகளும் அடங்கும்.
பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.