நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்.
இன்று சமர்ப்பிக்கப்படுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும்.
2026 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்தச் செலவு ரூபாய் 4,434 பில்லியன்களாகும்.
வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிதி அமைச்சுக்கு ரூ.634 பில்லியன்களும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு ரூ. 554 பில்லியன்களும், பாதுகாப்பு அமைச்சுக்கு ரூ.455 பில்லியன்களும் மற்றும் கல்வி அமைச்சுக்கு ரூ.301 பில்லியன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
அந்நியச் செலாவணி வீதத்தை நிலையான மட்டத்தில் பேண முடிந்துள்ளதாகவும், கடன் தரப்படுத்தல்கள் தற்போது உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டொலர் 7 பில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அரச வருமானம் 16% மட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இலத்திரனியல் கொள்வனவு முறைமையை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அரச நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான டிஜிட்டல் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2026 மார்ச் மாதத்திற்குள் டிஜிட்டல் சொத்துக்களை அறிவிப்பதற்கான ஒரு முறையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
2025 செப்டம்பர் மாதம் வரை அமெரிக்க டொலர் 823 மில்லியன் நேரடி வெளிநாட்டு முதலீடு நாட்டிற்கு வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு $737 மில்லியன்; 2024 இல் $614 மில்லியன்; ஆனால் இந்த செப்டம்பரில் மட்டும் $823 மில்லியன் மொத்த அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.
நீதித்துறை அதிகாரிகளுக்காக ஒரு நன்னெறி விதிமுறையை 2026 இல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
முறைசாரா வழிகளில் வரிச் சலுகைகள் வழங்குவது இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வரிக் நிர்வாகம் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
வெளிப்படைத்தன்மையுடனும், விதிகளின் அடிப்படையிலும், அளவுகோல்களின்படியும் வரிச் சலுகைகளை வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக ‘அபிவிருத்தித் திட்டங்கள் சட்டம்’ மற்றும் ‘துறைமுக நகர சட்டம்’ திருத்தப்படும்.
SVAT (Suspended Value Added Tax) இரத்து செய்யப்பட்டு, வரிப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முறைமை முறைப்படுத்தப்படும்.
அரச வர்த்தக முகாமைத்துவச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக, வழங்கப்பட்ட வரி விலக்கு அறிக்கைகள் வருடத்திற்கு இருமுறை நிதி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் எவ்வளவு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் பார்க்க முடியும்.
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் (மேலும் சில முக்கிய அம்சங்கள்)
வாகன இறக்குமதிக்காக அமெரிக்க டாலர் 1,933 மில்லியன் பெறுமதியான கடனுறுதிக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன் செலுத்துகை $2,435 மில்லியன் ஆகும். செப்டம்பர் 30 ஆம் திகதி வரை இதில் $1,948 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் மேலும் $487 மில்லியன் செலுத்தத் தயாராக உள்ளது. இது 2024 ஐ விட வெளிநாட்டுக் கடன் சேவை கொடுப்பனவில் $761 மில்லியன் அதிகமாகும்.
2028 ஆம் ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடன் சேவை $3,259 மில்லியன் மட்டுமே என்றும், இது 2025 ஆம் ஆண்டை விட $824 மில்லியன் அதிகரிப்பு மட்டுமே என்றும் ஜனாதிபதி கூறினார்.
வாகன சந்தை திறக்கப்பட்டு $1,373 மில்லியன் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
2024 செப்டம்பர் வரை வெளிநாட்டு வருமானம் $19,338 மில்லியன் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இது $21,272 மில்லியனாக இருக்கும், இது $1,934 மில்லியன் அதிகரிப்பாகும்.
நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இலக்குகள்.
சில ஆண்டுகளில் 7% ஐத் தாண்டும் வளர்ச்சியை அடைதல்.
வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, விதிகளின் அடிப்படையிலான வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுதல்.
மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களை திறமையாகச் செயற்படுத்துதல்.
ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மூலம் உயர் வருமானம்.
தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் 2025 – 2029 மூலம் ஏற்றுமதிகளைப் பல்வகைப்படுத்தல்.
தற்போதுள்ள சந்தைகளை விரிவுபடுத்துதல்.
ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டுவதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தல்.
ஒரு புதிய சுங்க வரிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
