அரசியல்உள்நாடு

2026 நடுப்பகுதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – உதய கம்மன்பில

2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறும் சூழலே காணப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்த போக்கில் செல்வதை அவதானிக்க முடிகிறது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் அடுத்தாண்டு பொதுத்தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்தலாம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நாட்டில் திட்டமிட்ட வகையில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

சந்தையில் நிலவிய உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 2025 ஆம் ஆண்டு 06 இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளின் பிரகாரம் உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

உப்பு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனத்துக்கே வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு சுங்கத்தில் இருந்து இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. ஆகவே சந்தையில் நிலவும் உப்பு விலையேற்றத்தை மேலும் அதிகரிப்பை கட்டுப்படுத்த இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தொகை அடங்கிய 6 கொள்கலன்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த உப்பு இறக்குமதியிலும் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 5.1 சதவீதத்தால் வளர்ச்சியடைய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதத்தால் பதிவாகிய நிலையில் இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு 3.1 சதவீதத்தால் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது. பொருளாதார வளர்ச்சி ஒடுக்கமடையும் தன்மை காணப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலைமை காணப்படுகிறது. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்தலாம்.

ஆனால் எதிர்கட்சிகள் ஒன்றிணையும் நிலையில் இல்லை மாறாக ஜனாதிபதி பதவிக்கான ஆடையை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

மக்கள் வங்கி கிளைகள் திறந்திருக்கும் நேரம் அறிவிப்பு

இலங்கை தனது முதலாவது குரங்கு அம்மை நோயை உறுதிப்படுத்தியது

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்ப பட்ட  மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பில் விசாரணை