கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, அதன் ஊழியர் ஒருவர் வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் சென்றபோது, அது கொள்ளையிடப்பட்டதாக நம்பும்படி திட்டமிட்டு, அந்தப் பணத்தை அபகரித்த பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரங்மினிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பணியக அதிகாரிகள் குழு சோதனைக்கு உட்படுத்தியது.
இதன்போது முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த ஒருவரிடம் இருந்த பைக்குள் 30 இலட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. குறித்த பணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அந்த நபரையும் முச்சக்கரவண்டியின் சாரதியையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் பணம் புறக்கோட்டைப் பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஒருவரால், நிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டபோது, அது கொள்ளையிடப்பட்டதாக நம்பும்படி திட்டமிட்டுச் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது, இக் குற்றத்துடன் தொடர்புடைய மேலும் 15 இலட்சம் ரூபாயுடன் ஒரு சந்தேக நபரான பெண்ணையும், மேலும் 2 கோடியே 22 இலட்சத்து 45 ஆயிரம் (22,245,000) ரூபாயுடன் மேலும் ஐந்து சந்தேக நபர்களையும், குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், சந்தேக நபரான பெண் 60 வயதுடையவர் என்றும், இவர்கள் களனி, பேலியகொட, வெள்ளம்பிட்டிய, மாவனெல்லை மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
