அரசியல்உள்நாடு

12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் சமூக ஊடக பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் திட்டம் – அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசிப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள நிலையில், அதற்கு இணையாக சமூக ஊடகப் பயன்பாட்டையும் தடை செய்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகள் பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டார்.

பிள்ளைகள் இணையத்துடன் இணைவதன் மூலம் இடம்பெறும் பல்வேறு ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைக் கையாள்வதற்காகப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர்கள் தொடர்பான 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன.

அவற்றில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டத்தின் கீழ் 8,514 முறைப்பாடுகளும், அதன் நேரடி எல்லைக்குள் வராத 1,941 முறைப்பாடுகளும் உள்ளடங்குகின்றன.

கடந்த ஆண்டு கிடைத்த முறைப்பாடுகளில்:

பாலியல் துன்புறுத்தல்: 545 முறைப்பாடுகள்.

பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம்: 231 முறைப்பாடுகள்.

இளம் வயதுக் கர்ப்பம்: 79 சம்பவங்கள்.

கருக்கலைப்பு: 03 சம்பவங்கள்.

சிறுவர் திருமணம்: 09 சம்பவங்கள்.

பாலியல் வல்லுறவு: 38 முறைப்பாடுகள்.

சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறை: 150 முறைப்பாடுகள்.

தற்கொலை முயற்சி: 20 முறைப்பாடுகள்.

இவை தவிர, பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டுப் பெற்றோர் வெளிநாடு சென்றமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும் கடந்த ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”

கூட்டத்தை குழப்ப வந்த மு.க ஆதரவாளர்களை தெரிக்கவிட்ட ரஸ்மின்

editor