உள்நாடுபிராந்தியம்

105 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு

மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் (15) மாலை போராட்டக் களத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு, போராட்டக் களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கருத்து தெரிவிக்கையில்,

“மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் 105ஆவது நாளைக் கடக்கின்றது.”

“ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுகின்றோம். எமது போராட்டம் என்ன கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டதோ, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.”

“எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்னவென்றால், மன்னார் மண்ணிலே கனிம மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும். மேலும், மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல், மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.”

“கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனே இந்தப் போராட்டத்தை நிறுத்துகிறோம். வெகு விரைவில் அரசாங்கம் கனிம மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியைப் பெற்று தேசிய கொள்கையாக அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்புகின்றோம்.”

“எதிர்வரும் காலத்தில் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளுவதற்காக எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அரச அதிபர் தலைமையில் உடனடியாக அமைத்து, குறித்த குழுவினுடைய கண்காணிப்பின் கீழ் எல்லா விதமான செயல்பாடுகளையும் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் என்பதை இப்போராட்ட குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

இதைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

-மன்னார் நிருபர் லெம்பட்

Related posts

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்போம் – அநுர

editor

நாளை முதல் நாடாளுமன்றத்தை பார்க்க மக்களுக்கு வாய்ப்பு

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் – அச்சுறுத்தலான மரங்கள்.