மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மின் விநியோக தடங்களினால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
வெள்ள அனர்த்தத்தினால் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பத்தை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பின் மீள் நிர்மாணத்தை தொடர்ந்து இன்று பிற்பகல் அப்பகுதிக்கான மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.
மின்சார இணைப்பை மீள வழங்குவதற்கான துரித முயற்சிகளை இலங்கை மின்சாரசபையினர் மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தடைப்பட்டிருந்த மின்விநியோகமானது இன்று (06) சனிக்கிழமை, மாலை வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது. இதனால் மின்பாவனையாளர்கள் தங்கு தடையின்றி மின்சாரத்தினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற கள ஆய்வுக்குப் பின்னர், ரந்தம்பே-மஹியங்கனை பாதையில் தற்காலிக கோபுரங்களை அமைப்பதற்கான வேலைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெற்றதன் பிற்பாடு, இன்றைய தினம் அம்பாறை மற்றும் வவுணதீவு மின் கட்டமைப்புக்கள் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மின்சாரத்தை வழங்குவதற்கு இரவு பகலாக முயற்சிகளை மேற்கொண்ட இலங்கை மின்சார சபையினருக்கும், அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கும் பொதுமக்கள் நங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
-ராபி
