2024 ஆம் ஆண்டு இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையின் முன்னாள் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நயனஜித் ஹேமந்த ரணசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்ததன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பூசா சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவருக்கு, அவரது சிகிச்சை முடிந்த பின்னரும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் வைத்திருக்க 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த தொகையில் 3 இலட்சம் ரூபாவை முதற்கட்ட இலஞ்சமாக பெற்றிருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.