பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (20) பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, அவர்களுக்கிடையில் கல்வி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்ட தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்தும், காத்தான்குடி முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கல்வித்தந்தை C.W.W. கன்னங்கரா அவர்களின் திட்டத்தின் கீழ் 1950 களில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை முழுமையாக புனரமைப்பது மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி குறித்தும் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.
-ஊடகப்பிரிவு