உள்நாடு

ஹர்த்தால், போராட்டங்கள் அவசியமற்றவை – சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம்

தமிழ் மக்களின் போராட்டங்களால் தோல்வியடைந்து மீண்டு வரும் பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் இக்காலகட்டத்தில், ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றவை என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 18 ஆம் திகதி வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும் தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சச்சிதானந்தம் பேசுகையில்,

“இந்த கடையடைப்பு போராட்டம் கடைந்தெடுத்த கயவர்களால் அழைக்கப்பட்டது. இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். கடையடைப்பு தேவையற்றது மற்றும் காலத்துக்கு ஒவ்வாதது” என்று வலியுறுத்தினார்.

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அறிக்கையின்படி அவர் கஞ்சா போதையில் நீரில் வீழ்ந்து உயிரிழந்ததாகவும் சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இராணுவ பிரசன்னம் என்பது தோல்வியடைந்த இனத்தின் இயல்பான அடக்குமுறையின் விளைவு என்றும் அவர் கூறினார்.

மடு மாதாவின் நலனுக்காக போராட்டத்தை பின்நகர்த்தியவர்கள், நல்லூர் திருவிழாவை குறிவைத்து கடையடைப்பு என அழைப்பு விடுத்து சுயநல அரசியல் இலாபம் தேட முயல்வதாக சச்சிதானந்தம் குற்றஞ்சாட்டினார்.

இது நாளாந்தம் உழைத்து வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

வர்த்தகர்கள், போக்குவரத்து சார் சங்கங்கள், மற்றும் பொது அமைப்புகள் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது எனவும், இத்தகைய நரித்தனமான அரசியல் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Related posts

லங்கா ஐஓசியின் அறிவித்தல்

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

‘இரண்டாவது அலைக்கு காத்திருங்கள்’