பதவி கவிழ்க்கப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனாவின் உத்தியோகபூர் இல்லம் அருங்காட்சியமாக மாற்றப்படவுள்ளது.
அவரது, சர்வாதிகார ஆட்சியை நினைவூட்டும் வகையில் ஹஸீனா வசித்த இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான தீர்மானத்தை பங்களாதேஷில் தற்போது ஆட்சியிலுள்ள காபந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 2024 ஆகஸ்ட் ஆறாம் திகதி மக்கள் புரட்சியால் பதவி கவிழ்க்கப்பட்ட ஷேக்ஹஸீனா தற்போது இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
இந்நிலையில், தற்போதைய காபந்து அரசாங்கம் 2026 ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்தவுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தும் 85 வயதான நோபல் பரிசு வென்ற மஹம்மது யூனுஸ் தலைமையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளதாகவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பங்காளதேஷில் மாணவர்களின் போராட்டம் நடைபெற்று ஒருவருடம் நிறைவடைந்த நிலையில்,இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஹஸீனாவின் ஆட்சி மனித உரிமை மீறல்களுக்கு பெயர் பெற்றது.
இதில் அவரது அரசியல் எதிரிகளை பெருமளவில் தடுத்து வைத்தல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் ஆகியவை அடங்குகின்றன.
2024காலப்பகுதியில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொ ள்வதற்காக சுமார் 1400 பேரை முன்னாள் பிரதமர் ஷேக்ஹஸீனா கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளுக்கும் ஹஸீனா முகம் கொடுக்கவுள்ளார்.