ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் சட்ட ரீதியாக கட்சிக்கு அந்த பொறுப்புக்கு வந்தவர்கள் அல்லவென தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்து அவரது நிழலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தை கையகப்படுத்தியிருந்தனர்.
எனவே அவர்களுக்கு இந்த கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை.
ஆகவே இது சட்டத்திற்கு முரணான ஆண்டு பூர்த்தி கொண்டாட்டமாகும்.
இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றில் நிலுவையில் உள்ளதுடன், தாம் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது என ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விரைவில் நீதிமன்றம் அறிவிக்கும் தீர்மானத்திற்கு அமைய, சட்ட ரீதியாக பொறுப்பேற்று ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் பயணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.