அரசியல்உள்நாடு

வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் விசேட கூட்டம்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், மீனவர்கள் மற்றும் அன்றாட தொழில் செய்வோர் எதிர்நோக்கிய சேதங்கள் தொடர்பாகவும், அவற்றுக்கான அரசாங்க நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும், இன்று (5) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களின் பங்கேற்புடனும் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்கள், அரச அதிகாரிகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மேலும் நிவாரண உதவிகள் வழங்குதல் தொடர்பான விடயங்கள் விரிவாக பரிசீலிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு கொடுப்பனவுகள் வழங்குதல், சேதமடைந்த வீடுகள், கால்நடைகள், மீனவர்களின் வாழ்வாதாரம், மற்றும் மற்ற சிறு தொழிலாளர்களின் சேத விபரங்களை முழுமையாகப் பதிவு செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டது விடயங்களை தெளிவுபடுத்தியதுடன், இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர் தேவையான விசேட ஒழுங்குகளை பிரதேச செயலகத்துக்கு செய்து கொடுப்பதாகவும், நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, முழுமையான சேத அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டார மக்களின் சேத நிலைமைகள் மற்றும் தேவைகளை, பாராளுமன்ற உறுப்பினரின் ஊடாக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

பிரதேச செயலாளர், இந்த விடயங்களை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்து, முழுமையான சேத விவரங்களை சரிபார்த்து, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அறிக்கை அனுப்புவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை தவிசாளர், நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் மற்றும் அனர்த்தத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

-ஊடகப்பிரிவு

Related posts

இலங்கை – இத்தாலி இருதரப்பு விமான சேவைகள்

editor

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவு

editor

ஊரடங்கை மீறிய 150 பேர் கைது