உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் நிவாரணம் கிடைக்கவில்லை – கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ரொப்கில் சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் புயல் காரணமாக, சுமார் 46 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் தளபாடங்கள், உடைகள் உள்ளிட்ட பல்வேறு உடைமைகள் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களுக்குத் தலா 25,000 ரூபா நிவாரணம் வழங்குவதற்காக கிராம உத்தியோகத்தர் விபரங்களைச் சேகரித்துச் சென்றார். ஆயினும், இதுவரை சுமார் 20 குடும்பங்களுக்கு மட்டுமே அந்த நிதி கிடைத்துள்ளதாகவும், மிகுதி 26 குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், “நாங்கள் அனைவரும் ஒரே அளவில்தான் பாதிக்கப்பட்டோம். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்துக் கேட்டால், கிராம உத்தியோகத்தரும் பிரதேச செயலக அதிகாரிகளும் ஒருவரையொருவர் கைகாட்டுகின்றனர். நாங்கள் வங்கிக்கும் பிரதேச செயலகத்திற்கும் அலைந்து திரிய வேண்டியுள்ளது.

அரசாங்கத்தால் எங்களுக்கு நான்கு பிஸ்கட் பெக்கற்கள் மாத்திரமே வழங்கப்பட்டன. அதையும் 5 வயதுக்குக் குறைந்தவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் சாப்பிடக்கூடாது எனக் கூறினர்.

வெள்ளம் வீட்டிற்குள் புகுந்தபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே நாங்கள் போராடினோம்.

ஆனால், கிராம உத்தியோகத்தர் வெள்ளம் புகுந்ததற்கான புகைப்படம் இருக்கிறதா எனக் கேட்கிறார். இது மிகவும் அநீதியானது,” எனத் தெரிவித்தனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், இது குறித்து நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதன்போது, சிலருக்கான நிவாரணக் காசோலைகள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதனை நாளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாளை உரிய தீர்வு கிடைக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்து மக்கள் கலைந்து சென்றனர்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், “ரொப்கில் பகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பலருக்கு இலட்சக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களில் 20 பேருக்கு மட்டுமே 25,000 ரூபா கிடைத்துள்ளது.

விடுபட்டவர்களுக்கு நிதியைப் பெற்றுக்கொடுக்க நான் நேரடி நடவடிக்கை எடுப்பேன். இல்லாவிடில் மக்களுடன் இணைந்து நானும் போராடுவேன்,” என்றார்.

-சுந்தரலிங்கம்

Related posts

ஜேவிபியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor

பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் 05 ஆம் திகதிக்குள்

editor

மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’ [VIDEO]