உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் தலைவர் கொலை – துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான தகவல்கள்

வெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யவும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விசாரணைக் குழுக்களை கண்காணிக்கும் பணிக்காக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் மாத்தறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை அடையாளம் காண இரண்டு பொலிஸ் குழுக்கள் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்புப் பிரிவில் இருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து மாத்தறை வரை ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்ததாகவும், மாத்தறையில் வைத்து வேறொரு நபர் அவருக்கு மற்றொரு மோட்டார் சைக்கிளை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இன்னொரு மோட்டார் சைக்கிளை வழங்கிய நபர் தொடர்பாகவும் விசாரணை அதிகாரிகள் தற்போது கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, குற்றவாளிகள் தொடர்ந்தும் தென் மாகாணத்திலேயே பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அக்குரஸ்ஸ, இமதுவ மற்றும் யக்கலமுல்ல ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைகளில் காலி மற்றும் மாத்தறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுகள், பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

Related posts

நாட்டின் ஆறு மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை அடக்க தனித்தீவு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார்

editor