வென்னப்புவ பொலிஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பகுதியில் நேற்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக 26 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் இருவரும் இன்று (செப். 1) மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று (ஆக. 31) கைத்துப்பாக்கியுடன் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் (ஆக. 30) காலை 10.30 மணியளவில் வென்னப்புவ பொலிஸ் நிலையம் அருகே அமைந்துள்ள வெவா வீதிப் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
காரில் வந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை விபத்துக்குள்ளாக்கி, பின்னர் இருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் காயங்களுடன் தப்பிச் சென்ற நிலையில், மற்றொருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு திரும்பி வரும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்தவரின் வழக்கு செப்டம்பர் 9, 2025 அன்று நீதிமன்றத் தீர்ப்பு வரவிருந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது என்றும் பொலிஸார் மேலும் கூறியது.